நாகை மாவட்டம், குத்தாலம் ஒன்றியத்தில் 23 ஒன்றியக் கவுன்சிலர்கள் உள்ளனர். இவற்றில் 13 கவுன்சிலர்களை திமுகவும், அதிமுக 7 கவுன்சிலர்களையும், பாமக, பாஜக, சுயேட்சை, தலா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர். பெரும்பான்மை இடங்களைப் பிடித்த திமுக ஒன்றியக் குழுத் தலைவர் பதவியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலையில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் மகேந்திரன் 13 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவியை கைப்பற்றினார்.
இதனையடுத்து மாலையில் நடைபெற்ற துணைத்தலைவர் பதவி தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக திமுக 13 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இதனால் ஒன்றிய அலுவலகம் முன்பு இரண்டு தரப்பினரும் மோதிக் கொண்டர்.
இந்த பதற்றமான சூழ்நிலையில் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், திமுக ஒன்றியக் குழு உறுப்பினர்களை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வெளியே கொண்டு வந்து வேனில் அழைத்துச் சென்றார். இதனையடுத்து அங்கு வந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் தமிழரசன் தலைமையிலான அதிமுகவினர், ' திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை வாக்கு நடைபெறும் இடத்திற்கு எப்படி அனுமதித்தீர்கள்? இதனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி தேர்தல் நடத்தும் அலுவலரை அவரது அறையில் வைத்து முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது, திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், வாக்களிக்கும் இடத்திற்கு அருகே நின்றிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, சிசிடிவி காட்சிகளை வைத்து குத்தாலம் கல்யாணத்தை, வாக்களித்த இடத்திற்கு அருகில் அனுமதித்த அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக முறைகேடாக பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரியும் அதிமுகவினர் வலியுறுத்தினர்.
இச்சம்பவம் அறிந்து வந்த மயிலாடுதுறை கோட்டாட்சியர் மகாராணியிடம் மனு அளித்தனர். தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் மகாராணியிடம் சீல் வைத்து ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பெயரில் அதிமுகவினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க...பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்து - 3 பேர் உயிரிழப்பு