நாகை மாவட்டத்தில் வடக்கு பனையூர், தெற்கு பனையூர், அனக்குடி ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு கடந்த 2017-2018ஆம் ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாக கூட்டுறவு வங்கியில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 651 விவசாயிகளுக்கு 2 கோடியே 24 லட்ச ரூபாய் வழங்கபட்டுவிட்டது.
ஆனால், இன்னும் பெருவாரியான விவசாயிகளுக்கு அது சென்று அடையாததால், கூட்டுறவு வங்கியை நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவல்துறை மற்றும் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் உள்ளிட்டோர் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் காப்பீட்டு நிறுவனத்தால் வழங்கபட்ட தொகையில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் தரப்பில் இருந்து வங்கி அலுவலர்களிடம்,"பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட வடக்கு பனையூர் கூட்டுறவு வங்கி செயலாளரை பணி நீக்கம் செய்தாக வேண்டும், இது எதுவும் நடக்கவில்லை என்றால் வருகின்ற 25 ஆம் தேதி அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக." அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.