நாகை மாவட்டத்தில் இன்று (ஜூலை30) 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 37 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோதனையில் ஒரேநாளில் 37 பேர் கரோனா தொற்று உறுதியானது இதுவே முதல் முறையாகும்.
மேலும், மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீநாத் கடந்த 27 ஆம் தேதி முன்னெச்சரிக்கையாக தன்னிடம் உள்ள அனைத்து அதிரடிப்படை வீரர்களையும் கரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தினார்.
அதன் முடிவு வந்ததில் காவல் கண்காணிப்பாளரின் பாதுகாவலர், ஓட்டுனர், ஏழு அதிரடிப்படை வீரர்கள் என ஒன்பது பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அனைவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்கண்காணிப்பாளருக்கு கரோனா தொற்று இல்லை. மயிலாடுதுறை செங்கமேட்டு தெருவில் உள்ள மருத்துவர் ஒருவர், மயிலாடுதுறை நகர ஆரம்பசுகாதார செவிலியர் ஒருவருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.