நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கீழவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் பாஸ்கரன் (52). இவர் குத்தாலம், மாதிரிமங்கலம், மயிலாடுதுறை, மாப்படுகை, சீர்காழி, சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவர்களை சந்தித்து ரூ.10 ஆயிரம் கொடுத்தால் அவர்களுக்கு, ஒரு லட்சம் நிதியினை மதுரையைச் சேர்ந்த பெரிய நிறுவனம் ஒன்று அளிக்க உள்ளது என்று கூறியுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ரூ.2 கோடி மேல் வசூல் செய்து பணத்தை மதுரையை சேர்ந்த சாந்தி, தாமரை ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார். பணம் வசூல் செய்வதற்கு கொண்டல் தேனூரை சேர்ந்த ஜான்சிராணி என்பவர் உதவி செய்துள்ளார்.
பணம் கொடுத்து இரண்டு ஆண்டு ஆகியும் நிதி உதவி வராததால் பணம் கொடுத்தவர்கள் பாஸ்கரனை நெருக்க ஆரம்பித்துள்ளனர். பாஸ்கரன் அவ்வப்போது பல்வேறு காரணங்கள் சொல்லி சமாளித்து வந்துள்ளார்.
இதையடுத்து பாஸ்கரிடம் கொடுத்த பணத்தை திருப்பி தீவிரமாக கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அவர்களை அழைத்துக் கொண்டு மதுரைக்கு சென்ற பாஸ்கரன், சாந்தி, தாமரையிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார், அதற்கு அவர்கள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்ட பிறகு பார்க்கலாம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர்.
இதனால் மன உளைச்சலில் இருந்த பாஸ்கர் (03/06/20) அன்று காலையில் மாரடைப்பால் மரணமடைந்தார். பாஸ்கரிடம் பல லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த மாப்படுகை கீதா, வினோத்ராஜ், மயிலாடுதுறை சத்யா, மாதிரிமங்கலம் சாந்தா, லதா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் பாஸ்கர் வீட்டுக்கு சென்று அங்கே அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்திருக்கின்றனர்.
அதையடுத்து அவர்கள் குத்தாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து குத்தாலம் காவல்துறையினர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்க கூறியதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க போவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் கத்தி முனையில் பணப்பறித்தவர்கள் கைது!