மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, அகரஆதனூரைச் சேர்ந்த விவசாயி, மதன்மோகன் (32). அவரது தாய் உமாமகேஸ்வரி (56) ஆகியோர் கடந்த திங்கட்கிழமை (அக்.11) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்திற்குச் சென்றனர்.
அப்போது, 'தாங்கள் நிதி நிறுவனம் ஒன்றில் விவசாயக்கடன் பெற்று டிராக்டர்கள் வாங்கினோம், தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடன் தவணையை திரும்பச் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனைக் காரணம்காட்டி டிராக்டர்களை ஜப்தி செய்து, மதன்மோகனின் கையெழுத்தை போலியாக இட்டு தனியார் நிதி நிறுவனம் மோசடி செய்தது.
தீக்குளிக்க முயற்சி
இது குறித்து பல இடங்களில் புகார் அளித்தும் அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை' எனக் குற்றஞ்சாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதேபோல் கடவாசலைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், அவரது மனைவி குணவதி ஆகியோர் சொத்துப் பிரச்னை காரணமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இந்த இரு குடும்பத்தினரையும் மீட்ட காவல் துறையினர், அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உண்ணாவிரதப் போராட்டம்
இந்நிலையில், இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டகமலநாதன் அளித்தப் புகாரின் பேரில் மதன்மோகன், உமாமகேஸ்வரி, பாலசுப்ரமணியன், குணவதி ஆகிய இரண்டு குடும்பத்தார் மீதும் காவல் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனையறிந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மதன்மோகன், அவரது தாயார் உமாமகேஸ்வரி ஆகிய இருவரும் நேற்று (அக்.12) மதியம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து விவசாயி மதன்மோகன் கூறுகையில், 'மோசடி செய்து டிராக்டரை பறிமுதல் செய்ததால் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த தங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எங்களை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு மருத்துவர்கள் 17 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அக்.20 போராட்டம்!