நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே உள்ள பரசலூர் ஊராட்சி, ராஜராஜன் தெருவைச் சேர்ந்தவர் கலியவரதராஜன் (65), தனது மனைவி பானுமதி உடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சுப நிகழ்ச்சி ஒன்றுக்கு வீட்டின் கதவை பூட்டிவிட்டு, அருகே சாவியை வைத்துவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் சாவியைக் காணவில்லை. உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்திருந்தது. அதிலிருந்த 11 பவுன் நகை, பத்தாயிரம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து கலியவரதராஜன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பீரோ, கதவின் சாவி அருகிலேயே வைத்திருந்ததால், எந்தவித அச்சமுமின்றி வீட்டின் உரிமையாளர்போல் உள்ளே நுழைந்து நகை, பணம் ஆகியவற்றைத் திருடன் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: யூ-ட்யூப் பார்த்து கற்று கொள்ளையடித்த கல்லூரி மாணவன் கைது!