கரோனா போன்ற நெருக்கடி காரணமாக வேலை இழந்து வரும் வெளிநாடு மற்றும் புலம் பெயர் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று (ஜூலை 24) எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது.
இதில் நாகை தொகுதியைச் சேர்ந்த புலம் பெயர்ந்த மக்களின் எதிர்கால நலன் கருதி விவசாயம், தொழில்துறை, கால்நடை, சிறு குறு தொழில்கள் ஆகியவற்றில் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், மானியங்கள், வங்கி உதவிகள் உள்ளிட்டவை குறித்து அலுவலர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது.
இதில் நாகை சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் சார்பில் மேற்கண்ட ஒவ்வொரு துறையின் சார்பிலும் காணொளி கருத்தரங்கம் துறை சார்ந்த அலுவலர்களை வைத்து நடத்துவது என்றும், அதில் தொழில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கேற்க செய்வது குறித்தும் முடிவு செய்யப்பட்டது.
இது கரோனா நெருக்கடி காரணமாக வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்வோருக்கும், பிற மாநிலங்களிலிருந்து வேலையில் இருந்து திரும்பியவர்களுக்கும் இந்த வழிகாட்டல் முகாம் பெரும் உதவியாக இருக்கும் என நாகை சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளருமான தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.