இதுதொடர்பாக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி கூறுகையில், '' நாகை மற்றும் நாகூர் கடற்கரை மேம்பாடு குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் இறுதி செய்து கொடுத்த திட்ட அறிக்கையின் நகலை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை சந்தித்து கொடுத்தேன். அடுத்த மாதம் இப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்.
திருமருகலை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை செயல்படுத்தி தருமாறு வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் உதயகுமாரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். தொடர்ந்து அவரிடம் நாகை நம்பியார் நகரில் சமீபத்தில் இடிக்கப்பட்ட புயல் பாதுகாப்பு மையம் இருந்த இடத்தில், பன்னோக்கு பேரிடர் மையம் ஒன்றை கட்டித் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளேன்.
திட்டச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி தருவது குறித்து உடன் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் மனுவை அளித்தேன்.
நாகூரில் அரசு மகளிர் கல்லூரி அமைய, வக்பு வாரியத்திற்கு சொந்தமான இடத்தை வழங்கிட ஆவணம் செய்யுமாறு அமைச்சர் நிலோபர் கபிலை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.
புயல் பாதிப்பு அதிகமிருக்கும் நாகப்பட்டினத்தில் பூமிக்கு கீழே மின் கம்பங்களை புதைக்கும் புதை வட மின்கம்பி பதிக்கும் திட்டத்தை நாகையில் செயல்படுத்தி தருமாறும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டுக்கொண்டேன்.
அமைச்சர் செல்லூர் ராஜுவை சந்தித்து, நாகை தொகுதியை சேர்ந்த கூட்டுறவு பணியாளர்கள் தந்த கோரிக்கை மனுவை அளித்துள்ளேன். அதுபோல் அமைச்சர் செங்கோட்டையனிடம் நாகை தொகுதியில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களின் தர உயர்வு குறித்து நினைவூட்டினேன்.
ரேஷன் கடைகளில் கைரேகை வைக்கும் பயோ மெட்ரிக் முறையில் உள்ள நடைமுறை சிரமங்களை களையுமாறு அமைச்சர் காமராஜிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்'' என்றார்.
இதையும் படிங்க: ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்' - அண்ணாமலை