திண்டுக்கல் மாவட்டம், பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவியை பிரிந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறி மயிலாடுதுறை வந்துள்ளார். இதனிடையே, கரோனா ஊரடங்கு காலத்திலும் அவரின் குடும்பத்தினர் பல இடங்களில் சரவணனைத் தேடியுள்ளனர்.
எங்கும் தேடியும் கிடைக்காத சரவணன், மயிலாடுதுறை பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் வீதிகளில் படுத்து உறங்கியுள்ளார். இந்தநிலையில், மயிலாடுதுறை உள்ள பாரதிமோகன் அறக்கட்டளை சார்பில் வீதிகளில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சி முகநூலில் வெளியானது. இதைக் கண்ட குடும்பத்தினர் அந்த அறக்கட்டளையைத் தொடர்பு கொண்ட போது சரவணன் மயிலாடுதுறையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குத்தாலம் காவல் நிலையத்தில் சமூக செயற்பாட்டாளர் பாரதிமோகன் சரவணனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். சரவணனுக்கு முடி திருத்தம் செய்து புதிய உடைகள் கொடுத்து, அவரை அவரது குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தார். தொலைந்துபோன சரவணனை மீண்டும் பார்த்த அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க சரவணனை அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: கடத்தப்பட்ட குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு! கடத்தல்காரர்களிடம் தொடரும் விசாரணை!