மயிலாடுதுறை: காவிரி நீர் பிடிப்புப்பகுதியில் கனமழை பெய்து கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு கடலுக்குச்சென்றுகொண்டிருக்கிறது.
இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திற்கு உட்பட்ட குமாரமங்கலம் முதல் அளக்குடி வரையில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
கொள்ளிடம் ஆற்றில் குமாரமங்கலம் ஆதனூர் இடையே கட்டப்பட்டு வரும் கதவணைப்பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் அலுவலர்களிடம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துக்கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மெய்யநாதன் மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ஆற்றுப்பகுதிக்கு உட்பட்ட குமாரமங்கலம், மணல்மேடு, அளக்குடி, முதலைமேடு, நாதல்படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடக் கரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
ஊராட்சிச்செயலாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சித்தலைவர்கள் தங்கள் கிராமங்களில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அளக்குடி பகுதியில் கொள்ளிடக்கரையை பலப்படுத்துவதற்குத்தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அங்கு கரையைப்பலப்படுத்த நிரந்தரத்தீர்வு காண்பதற்கு ரூ.120 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயார்செய்யப்பட்டுள்ளது முதலமைச்சர் கவனத்திற்குக்கொண்டு சென்று விரைவில் நிரந்தரத்தீர்வுகான நடவடிக்கை எடுக்கப்படும். தண்ணீரின் வரத்து அதிகரித்தால் தேவைக்கேற்ப மக்களைப்பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்து அவர்களுக்குத்தேவையான வசதிகளும் செய்துகொடுப்பதற்கு அலுவலர்கள் தயார்நிலையில் இருக்கின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமனம்