கரோனா தொற்று குறித்த ஆலோசனைக்கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறையைச் சேர்ந்த அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அப்போது, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள கரோனா வைரஸ் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையினை அமைச்சர் ஆய்வு செய்தார். அதன்பின்னர் நாகையில் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களிடம் அமைச்சர் ஓ.எஸ். மணியன் போனில் தொடர்புகொண்டு ஆறுதலாக நலம் விசாரித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகை மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலம் சென்று திரும்பியவர்கள் 2,860 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், நாகையில் சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்ட 10 பேருக்கும் கரோனா தொற்று அறிகுறி இல்லை என்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.
நாகை மாவட்டத்தில் ஆதரவற்றோர் 1,200 பேருக்கு 3 வேலை உணவு வழங்கப்படுவதாகவும், வெளியூரில் இருந்து நாகையில் தங்கியுள்ள 44 பேருக்கு தங்குமிடம் உணவு வசதி ஏற்பாடு செய்யப்பட்டு அவர்கள் நலமுடன் இருப்பதாக அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 231 நபர்கள் கேரளா, கோவா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் உள்ளனர் என்றும், அவர்களின் பாதுகாப்பை அம்மாநில அரசுடன் பேசி உறுதி செய்துள்ளதாகவும் அமைச்சர் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிக்கரம்