நாகையில் 35 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊர்காவல் படை மண்டல அலுவலத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இன்று திறந்து வைத்தார்.
அப்போது நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவது தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ''தமிழ்நாட்டில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை அளித்து அதற்கான பணத்தினை வங்கி கணக்கில் பெற்று வருகின்றன. அவ்வாறு இருக்க விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தில் லட்சம் கொடுப்பது யார் தவறு. லஞ்சம் பெறும் விவகாரத்தை தடுக்க ஆலோசனை இருந்தால் கூறுங்கள். மனுதர்ம சர்ச்சை பேச்சு விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நற்பெயரை தரும். இது போன்ற கருத்துக்கள் நல்லவர்களுக்கு தேவையில்லாத ஒன்று'' என்றார்.
தொடர்ந்து தமிழ்நாட்டில் இரட்டை ஆட்சி நடைபெறுவதாகக் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ''இரண்டு கண் உள்ளவர்களுக்கு பார்வை ஒன்றாக இருக்கும். ஆனால் முத்தரசனின் இரு கண்களுக்கு மட்டும் இரண்டு பார்வைகள் உள்ளன'' என்றார். அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொடரும் மூடநம்பிக்கை... நாக்கை வெட்டி காணிக்கையாக செலுத்திய பக்தர்!