மயிலாடுதுறை: தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 69 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் திட்டத்தை மயிலாடுதுறையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று (ஆகஸ்ட் 17) கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 69 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றது. மேலும், தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளில் ஒரு லட்சத்து 31,000 பணியாளர்கள் மூலம் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இன்று (ஆகஸ்ட் 17) விடுபட்டவர்களுக்கு வரும் 24ஆம் தேதி மீண்டும் மாத்திரைகள் வழங்கப்படுகின்றது.
மேலும், கடந்த 9 ஆண்டு காலத்தில் மருத்துவத்துறை சார்பாக மத்திய அரசிடம் இருந்து 239 விருதுகள் தமிழ்நாடு சுகாதாரத் துறை பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் 239 விருதுகளை தமிழ்நாடு சுகாதாரத் துறை மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையை நீக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு அரசின் திட்டமான மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி திட்டத்தில் 6 மாவட்டங்கள் விடுபட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு தேவை. இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை பலமுறை சந்தித்துள்ளோம். விரைவில் இதற்கான ஒப்புதல் கிடைத்தவுடன் மயிலாடுதுறை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் முதலில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கான டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணிகள் துவங்கி 33 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது 2028 ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மதுரையில் அதிமுக மாநாடு நடைபெற உள்ள அன்றைய தினத்தில் நீட் தேர்வு விளக்கு கேட்டு மாவட்ட தலைநகரங்களில் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், "இரண்டுக்கும் சம்பந்தம் கிடையாது எங்கள் போராட்டத்தில் அதிமுகவினர் வந்து கலந்து கொள்ளப் போகிறார்களா?" என்ன என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "வாங்க மதுரைக்கு உல்லாச பயணம் போகலாம்.. மாநாட்டிற்கு ஆட்கள் திரட்டும் அதிமுக" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்!