மயிலாடுதுறை: திருமண மண்டபம் திறப்பு விழாவில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி. செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அரசு தலைமை கொறடா கோவி.செழியன், விழா ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியை திமுக மாநாடு போன்று நடத்தியுள்ளதாகக் கூறினார்.
அதன்பின்னர் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ”தமிழ்நாடு அரசு கரோனா பரவலைத் தடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் நான் இவ்வளவு பேர் கூடியுள்ள கூட்டத்தில் பங்கேற்றதைத் தமிழ்நாடு முதலமைச்சர் நிச்சயமாகக் கேள்வி கேட்பார்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மயிலாடுதுறை மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளதால், மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் இக்கூட்டத்தை கரோனா விழிப்புணர்வு கூட்டமாக நடத்தியதாகக் கூறி தமிழ்நாடு முதலமைச்சரிடமிருந்து நான் தப்பித்துக் கொள்வேன்.
ஆனால் இந்தக் கூட்டம் மாநாடு போன்று நடப்பதாகக் கூறிய தலைமை கொறடா தான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு பதில் சொல்லியாக வேண்டும்” என்று கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாததை நகைச்சுவையாக சமாளித்துப் பேசினார்.
இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜகுமார், பன்னீர்செல்வம் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரேநாளில் 1,594 பேருக்குக் கரோனா பாதிப்பு