மேட்டூர் அணையில் இருந்து விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக ஜுன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக போற்றப்படும் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் மும்முரமாக குறுவை சாகுபடிப் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளனர்.
தற்போது விவசாயிகள் நிலத்தடி நீரைக் கொண்டு குறுவை சாகுபடிப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கருக்கு மேல் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கரோனா காலத்திலும் விவசாயப் பணிகளை தொடரலாம் என அரசு அறிவித்துள்ளது. அதனால் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி உள்ளிட்ட வட்டங்களில் நிலத்தை சமன்படுத்துதல், உழவு அடித்தல், பாய் நாற்றாங்கால் அமைத்தல் உள்ளிட்டப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், ஆட்கள் பற்றாக்குறையால் பாய் நாற்றாங்கால் அமைத்து இயந்திரம் மூலம் நடவுப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குறுவை சாகுபடி மேற்கொள்ள விவசாயக்கடன் தள்ளுபடி, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டங்கள், தடையில்லா மும்முனை மின்சாரம் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: வெட்டிவேர் முகக்கவசங்கள்: பெண்களின் புதுமுயற்சிக்கு அரசு உதவுமா?