மயிலாடுதுறை அருகே நீடுரில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு ஆய்வறிக்கை கேட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு மருத்துவ இயக்குநரகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், நீடூரில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைவது உறுதியாகி உள்ளது என்று முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநில தேர்தல் பணிக்குழுச் செயலாளருமான குத்தாலம் பி.கல்யாணம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மயிலாடுதுறையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,'மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றை மயிலாடுதுறை நீடூரில் கொண்டுவர நான் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக அங்கு மருத்துவக் கல்லூரி அமைவது உறுதியாகி, திட்ட அறிக்கையும் தயாராகிவிட்டது.
ஆனால், திட்ட அறிக்கையை அரசு கேட்கும்போது மட்டுமே அனுப்ப முடியும் என்பதால் மாவட்ட நிர்வாகம் அதனை அனுப்பாமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், தொடர் முயற்சியின் காரணமாக மருத்துவ இயக்குநரகத்தில் இருந்து மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகளின் இயக்குநர் எஸ்.குருநாதன் நீடுரில் மருத்துவக் கல்லூரி அமைவதற்கு இடம் மற்றும் ஆய்வு அறிக்கை கேட்டு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கடந்த 23-ஆம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனால், நீடூரில் 22.5 ஏக்கர் நிலப்பரப்பில் விரைவில் மருத்துவக் கல்லூரி அமைவது உறுதியாகி உள்ளது.
மேலும், மயிலாடுதுறை நகராட்சியில் 2007-ஆம் ஆண்டுமுதல் நடைமுறையில் உள்ள பாதாள சாக்கடை திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால் அத்திட்டத்தை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட்மனு தாக்கல் செய்திருந்ததன் தொடர்ச்சியாக, வல்லுநர்குழு சோதனை செய்து, அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, வல்லுநர் குழுவினர் சோதனை மேற்கொண்டு, பல்வேறு இடங்களில் கழிவு நீரேற்று நிலையங்களில் மோட்டார்கள் இல்லாததும், இயங்காததும் குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே, விரைவில் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்.
மேலும், தலைஞாயிறு நடிப்பிசைப்புலவர் கே.ஆர்.ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புணரமைத்து மீண்டும் துவக்கி நடத்திடக் கோரி வேண்டி கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி மற்றும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் முன்னாள் ஒன்றிய அமைப்பாளர் சி.மோகன்குமார் சர்க்கரைத் துறை ஆணையருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் அவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இந்தாண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி அன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், 4 வாரங்களில் சர்க்கரைத் துறை ஆணையரை மீண்டும் சந்தித்து கூடுதல் விவரங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் சர்க்கரைத் துறை ஆணையரிடம் கூடுதல் விவரங்களை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளார். இதனை மேற்கோளிட்டு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கவும், ஆலைப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை ஊதியத்தை வழங்கவும் சர்க்கரைத் துறை ஆணையருக்கு நானும் கடிதம் அனுப்பியுள்ளேன். இதன்மூலம் இந்த சர்க்கரை ஆலை மீண்டும் இயக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கைகூடியுள்ளது'என்றார்.