நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மிகப்பெரிய ஜவுளி நிறுவனமான சீமாட்டி என்ற ஜவுளிக்கடை உள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் இந்த ஜவுளிக்கடை நிறுவனத்தினர் கரோனா வைரஸ் தற்காப்பு நடவடிக்கையாக அரசு அறிவுறுத்தலின்படியும், சமூக பொறுப்புணர்வுடனும், வாடிக்கையாளர் பொதுமக்கள் நலன் கருதி கடை மூடப்பட்டு உள்ளதாகவும் விரைவில் கரோனா பாதிப்பிலிருந்து விடுபட இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாகவும் அறிவிப்பு பேனர் வைத்துவிட்டு, கடையின் பக்கவாட்டு கேட் வழியாக படுஜோராக ஜவுளி விற்பனையில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து ஜவுளி கடைக்கு வந்த மயிலாடுதுறை நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் கிருஷ்ணகுமார் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் கடையில் வியாபாரம் செய்வது தெரியவந்தது. உடனடியாக கடையை மூடா விட்டால் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனையடுத்து ஜவுளி கடை மூடப்பட்டது.
அரசு விதிமுறையை பின்பற்றி இந்த ஜவுளிக் கடையின் மீது ரூபாய் 50,000 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இதுபோன்று மக்கள் அதிக அளவில் கூடும் நிறுவனங்கள் அரசு அறிவுறுத்தலை பின்பற்றாமல் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மயிலாடுதுறை நகராட்சி துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வெளிமாநில தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை