மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில், கரோனா பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்த தங்களுக்கு தனியார் நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்களைத் திருப்பி செலுத்த கால அவகாசம் நீட்டித்தரக்கோரி தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 15 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.
அதில், வளர் ஆதித்யா, வெளிச்சம், மதுரா, கிராமவிடியல், எக்யூவிடாஸ் போன்ற பல்வேறு தனியார் நிறுவனங்களில் குழு, தனிநபர் கடன்களைப் பெற்று முறையாகச் செலுத்திவந்துள்ளனர்.
இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டு மாதந்தோறும் கடன் தொகையை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஆனால் தனியார் நிறுவனத்தினர் உடனடியாக கடன் தொகையை செலுத்தக்கோரி நிர்பந்தித்து ஆதார் எண்ணை முடக்கிவைத்து-விடுவோம் என்று கடுமையாகப் பேசி மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும் தினந்தோறும் மூன்று முறை வீடுகளுக்கு கடன் தொகையை வசூல்செய்ய வரும் ஊழியர்கள் தகாத வார்த்தைகளால் விமர்சித்து கடனைப் பெற்ற தங்களை மன வேதனைக்கு உள்ளாக்குவதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரோனா பொதுமுடக்கத்தைக் கருத்தில்கொண்டு கடன் தொகையை திருப்பி செலுத்த சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களிடம் பேசி கடன் தொகையை திருப்பி செலுத்த கால அவகாசம் பெற்றுத் தருமாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் அவர்கள், வருமானமின்றி தவித்துவரும் தங்களை தகாத வார்த்தைகள் கூறி அவமானப்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடம் பேசி கடன் தொகையை செலுத்த கால அவகாசம் நீட்டித் தர வேண்டும் என்று கூறி இரண்டாவது முறையாக மனு அளித்துள்ளதாகவும் வேதனையுடன் கூறினர்.
இதையும் படிங்க: கடன் தொல்லையால் செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்ற நபரால் பரபரப்பு!