மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியான ராஜன்தோட்டத்தில் சாய் ( SAI - Sports Authority of India) எனப்படும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. மத்திய விளையாட்டு துறை அமைச்சராக மணிசங்கர் ஐயர் பதவி வகித்த போது தமிழ்நாட்டின் மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதற்காக இங்கு இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது.
கூடைப்பந்து, கைப்பந்து, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கபாடி மற்றும் தடகளப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இங்கு மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மயிலாடுதுறை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி அரசு பள்ளிகளில் பயின்று விளையாட்டு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இங்கே தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளிக்கப்படுகின்ற மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, மற்றும் உதவித் தொகை உள்ள்ளிட்ட அனைத்தும் மத்திய அரசு விளையாட்டுத்துறை நிதியிலிருந்து வழங்கப்படுகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் இங்கே தங்கி விளையாட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
மயிலாடுதுறை பயிற்சி மையத்தில் இருந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று அதிக பதக்கங்களையும், கோப்பைகளையும் மாணவர்கள் குவித்து உள்ளார்கள். இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தில் நடப்பாண்டுக்கான வீரர்கள் வருகின்ற 22-ஆம் தேதி தேர்வு செய்ய உள்ளதாக சாய் அமைப்பு சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதில் கைப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, தடகளம் போன்ற போட்டிகளுக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக கபாடி போட்டிக்கு மட்டும் வீரர்கள் தேர்வு குறித்து அதில் வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த போது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கபாடி பயிற்சி அளிப்பதற்கான கோச் (ஆசிரியர்) இல்லாததால் கபாடி பயிற்சிக்கு மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்படாமல் இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது மாணவர்களிடையே பெறும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. வேண்டுமென்றே கபாடி போட்டி மத்திய அரசு கட்டுபாட்டில் உள்ள விளையாட்டு ஆணையத்தில் புறக்கணிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பாரா ஒலிம்பிக் எனப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டியில் கூட கபாடி போட்டி சேர்க்கப்பட்டு அதில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்று இருப்பதையும் காண முடிகின்றது.
கிராமம் சார்ந்த, குழு ஒற்றுமையை மேலோங்க செய்யக் கூடிய வல்லமைமிக்க, எதிரிகளை வீழ்த்தக்கூடிய வியூக அமைப்புகளும், உடல்கட்டும், மனித திறனையும் வெளிப்படுத்தக்கூடிய சிறந்த போட்டியாக கருதப்படும் கபாடி, தமிழரின் வீரத்தையும், விவேகத்தையும் பறைசாற்றி வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கபாடியை கிராமப்புற மாணவ, மாணவிகள் அதிக அளவில் விளையாடுவது வழக்கம். இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் பல விளையாட்டுகளில் சிறப்பாக விளையாடக்கூடிய நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு, உபகரணங்கள் அனைத்தும் கொடுத்து பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஆனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபாடிக்கு பயிற்சி ஆசிரியர் இல்லாததால் கடந்த 2 வருடங்களாக கபாடி வீரர்கள் தேர்வு செய்யப்படாமல் இருந்து வருவது பெரும் ஏமாற்றத்தை அளித்து வருவதாக வீரர், வீராங்கனைகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சாய் பயிற்சி மைய நிர்வாகியிடம் கேட்டபோது, கபாடி பயிற்சி அளிப்பதற்கு பயிற்சியாளர் (கோச்) பணியிடம் காலியாக உள்ளதாகவும், பயிற்சியாளர் நியமிக்கப்பட்ட உடன் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: IND VS Ire 2nd T20 : அயர்லாந்தை ஊதித்தள்ளிய இந்திய வீரர்கள்! தொடரை கைப்பற்றியது!