125 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரயில்வே சந்திப்பு கொண்டிருக்கும் ஊர். கவிச்சக்கரவர்த்தி கம்பர், தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை, நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் வாழ்ந்து மறைந்த பெருமைகொண்ட ஊர். புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்கள், பூம்புகார், தரங்கம்பாடி போன்ற வரலாற்றுச்சிறப்புமிக்க சுற்றுலாப் பகுதிகளை அருகே கொண்ட ஊர் எனும் பெருமை பெற்றது ’மயிலாடுதுறை’.
இத்தகைய சிறப்புமிக்க மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்று, கடந்த 30 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமாக இருந்த காலம் தொடங்கி மயிலாடுதுறை மாவட்டக் கோரிக்கை மக்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. ஆனால், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ஆம் ஆண்டு நாகப்பட்டினம் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது. 1997ஆம் ஆண்டு திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்திலும் மயிலாடுதுறைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
4 வட்டங்கள், 3 சட்டமன்றத் தொகுதிகள், 5 ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், 3 பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையில் சுமார் 10 லட்சம் பேர் வசிக்கின்றனர். மயிலாடுதுறையுடன் ஒப்பிடும்போது, தனியாகப் பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6 லட்சம் மக்கள் தொகையும் 3 வட்டங்களும் மட்டுமே உள்ளன.
இந்நிலையில் இந்த வருடம் தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல புதிய மாவட்ட அறிவிப்புகள் தமிழ்நாடு சட்டசபையில் வெளியிடப்பட்டன. அதே போன்று கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அரசின் இந்த அறிவிப்பு மயிலாடுதுறை கோட்டத்தில் இருக்கும் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. மயிலாடுதுறை மாவட்டத் தலைநகராக அறிவிக்கப்படுமா என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.
இதையும் படிங்க: