மயிலாடுதுறை: சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில், கடந்த மாதம் 30-ஆம் தேதி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், 4-வது தேசிய அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப்-2022 போட்டி நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 மாணவர்கள் பங்கேற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டுஉறைவிடப் பள்ளியைச் சேர்ந்த நரிக்குறவ மாணவர்கள் 14 பேரும், திருஇந்தளூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் நீடு அறக்கட்டளை உதவியுடன் படிக்கும் ஒரு நரிக்குறவ மாணவர் உள்ளிட்ட 2 மாணவர்களும் பங்கேற்றனர்.
பரிசுகளை அள்ளிய மாணவர்கள்: இதில், 6 பேர் இரு பிரிவுகளில் பரிசு பெற்றுள்ளனர். பல்லவராயன்பேட்டை உண்டு உறைவிடப்பள்ளி மாணவர்களில், 11 முதல் 13 வயது வரையிலான பிரிவில் 7-ஆம் வகுப்பு மாணவர் நவீன்ராஜ் முதல் பரிசை வென்றார். மேலும், மாணவர்கள் சாமுவேல், சஞ்சனா ஆகியோர் இரண்டாம் பரிசினையும், மகாலட்சுமி என்ற 2-ஆம் வகுப்பு மாணவி மூன்றாம் பரிசையும் வென்றனர்.
திருஇந்தளூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களில், சக்தி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் மூன்றாம் பரிசு பெற்றனர். மேலும், பல்லவராயன்பேட்டை உண்டு உறைவிடப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஆசைத்தம்பி சிறப்பாக பயிற்சி அளித்ததற்காக கேடயம் பெற்றார்.
அரசுக்கு கோரிக்கை: வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளரை நீடு அறக்கட்டளை நிர்வாகி விஜயசுந்தரம், தலைமையாசிரியை கே.கிருஷ்ணவேணி ஆகியோர் பாராட்டினர். மேலும் இப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் ஏற்பாடு செய்து தந்தால் மாணவர்களை மற்ற விளையாட்டுகளுக்கு கொண்டு சேர்க்க முடியும் என்றும் அரசுக்கு பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நரிக்குறவர் மக்கள் - சிறப்பு தொகுப்பு...