மயிலாடுதுறை: பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாடு அரசு பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவது வழக்கம். அதில் செங்கரும்பை சேர்த்து வழங்குவது கடந்த சில வருடங்களாக வழக்கத்தில் உள்ளது. 2020ஆம் ஆண்டு முழு கரும்பை தமிழ்நாடு அரசு வழங்கியது. அதேபோல் 2021ஆம் ஆண்டு திமுக அரசும் முழு கரும்பை பொங்கல் தொகுப்புடன் சேர்த்து வழங்கியது.
அதன் காரணமாக கரும்பு விவசாயிகள் இந்தாண்டு கூடுதல் பரப்பளவில் செங்கரும்பு சாகுபடி மேற்கொண்டிருந்தனர். ஆனால் இந்தாண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பில் கரும்பு வழங்கப்படாது என்றும் ரூ. 1,000 ரொக்கம் வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கருக்கு மேல் செங்கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த வேதனைக்குள்ளாகி உள்ளனர்.
பொங்கல் கரும்பை கொள்முதல் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரும்பில் கருப்புக்கொடி கட்டியும், கரும்பை ஆற்றில் வீசி எரிந்தும் போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து நேற்று (டிசம்பர் 26) மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் மண்சட்டி ஏந்தி, சட்டியில் நாமமிட்டு அதனுள் கோரிக்கை மனுவை வைத்து கோஷமிட்டபடி ஊர்வலமாக சென்றனர். அங்கு தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதன்பின் ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவு செய்தும், மாண்டஸ் புயலில் வீசிய காற்று காரணமாக விழுந்த கரும்புகளை சீர் செய்ய கூடுதல் செலவு செய்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் அறிவிப்பால் கரும்பிற்கு போதிய விலை கிடைக்காது. அரசின் நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அரசு கரும்பினை கொள்முதல் செய்யவில்லை என்றால் உயிரை மாய்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றும், விவசாயிகளின் வாழ்க்கை முதலமைச்சரின் கையில் தான் உள்ளது என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். அரசு கொள்முதல் செய்யாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரும்பு விவசாயிகள் அரை நிர்வாணமாகப் போராட்டம்