மயிலாடுதுறை: மாவீரன் வன்னியர் சங்கம் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி வழுவூரில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பூம்புகார் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் நிவேதா முருகனை மாவீரன் வன்னியர் சங்க நிறுவன தலைவர் விஜிகே. மணிகண்டன் சங்கப் பொறுப்பாளர்களிடம் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிகே மணிகண்டன் கூறுகையில், "மாவீரன் வன்னியர் சங்கம் சார்பாக வன்னியர்களுக்காக வழங்கப்பட்டுள்ள 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 15.1விழுக்காடாக உயர்த்த வேண்டும். அதிமுகவால் உருவாக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட வன்னியர் நலவாரியத்தை வன்னிய அமைப்பாக நிறுவித்து தனிவாரியம் அமைக்க வேண்டும்.
1987ஆம் ஆண்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 வன்னியர் தியாகி குடும்பங்களுக்கு வீடுகட்டி தந்து குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோரி திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரில் சமர்ப்பித்துள்ளோம்.
திமுக கூட்டணி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற எந்தவித எதிர்பார்ப்புமின்றி பாடுபட ஆதரவு தெரிவிப்போம். திமுக சார்பில் போட்டியிடும் பூம்புகார், சீர்காழி, தொகுதி வேட்பாளர்களையும் கூட்டணிக் கட்சி சார்பில் மயிலாடுதுறையில் போட்டியிடும் வேட்பாளரையும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியடைய செய்வோம்.
தமிழ்நாட்டில் அதிமுக தேர்தலில் படுதோல்வியடைந்து முதுகெலும்பு இல்லாத கூட்டணியாக மாறும். பாமக அரசியல் நாடகம் நடத்துகிறது. ராமதாஸ் அரசியல் வியாபாரி " என்று கடுமையாக விமர்சித்தார். முன்னதாக வேட்பாளர் நிவேதா முருகனுக்கு அச்சங்கத்தினர் பட்டாசு வெடித்து வரவேற்பளித்தனர்