நாகப்பட்டினம் மாவட்டம், காமேஸ்வரம் கிராமத்தில் மூவாயிரம் விவசாயிகள் ஒரு குழுவாக இணைந்து ஆசிய வங்கியின் கடனுதவி மூலம் மாம்பழக்கூல் தொழிற்சாலையை தொடங்கியுள்ளனர். 19 நிர்வாக இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டு 9 கோடியே 39 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட மாம்பழக்கூல் தொழிற்சாலையை, தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓஎஸ்.மணியன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டிருந்த மாம்பழக்கூல் தயாரிக்கும் கருவிகளை பார்வையிட்டு தயாரிப்பு முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
இதன் பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நாகை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள தொழிற்சாலைக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மாவட்டத்தின் தொழிற் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.