மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருநாங்கூரை சேர்ந்தவர் திருவேங்கடம்(78). இவர் நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றபின் தரங்கம்பாடி தாலுக்கா தலைச்சங்காட்டில் உள்ள ஸ்ரீநாண்மதியப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த 20 ஆண்டுகளாக அறங்காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலிலிருந்து வீட்டிற்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் திருவேங்கடத்தை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை கோயில் குளத்தில் ஆண் சடலம் மிதப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
செம்பனார்கோயில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குளத்தில் மிதக்கும் ஆண் சடலத்தை மீட்டு பார்த்தபோது திருக்கோயில் அறங்காவலர் திருவேங்கடம் என்பது தெரியவந்தது.
அப்போது, கோயில் அருகே கோசாலை வைத்து நடத்திவரும் திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பகுதியை சேர்ந்த முகுந்தன்(24) என்பவர் அறங்காவலர் திருவேங்கடத்திடம் தகராறு செய்ததாக கூறி, அப்பகுதி மக்கள் முகுந்தன் உள்ளிட்ட 3 பேரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
போலீசார் முகுந்தன் உள்ளிட்ட இரண்டு பேரையும் விசாரித்தபோது அறங்காவலர் திருவேங்கடத்திடம் அடிக்கடி தகராறில் முகுந்தன் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. மேலும் கோயில் அருகில் இருக்கும் குளம் அருகே திருவேங்கடம் வரும்பொழுது வழிமறித்து குளத்தில் தள்ளி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முகுந்தனை போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஜேசிபி ஆப்ரேட்டர் ஓட ஓட விரட்டிக் கொலை - 4 பேர் கைது