மயிலாடுதுறை மாவட்டத்திற்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றில், இளைஞர் ஒருவர், 18 வயது நிரம்பாத கல்லூரி மாணவியை தனது உறவினர் வீட்டிற்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்துவதாக குழந்தைகள் நல இலவச அழைப்பு எண்ணிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அத்தகவலின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப் பணியாளர் ரம்யா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியதில், 17 வயது கல்லூரி மாணவியை சீர்காழி தாலுக்கா கொண்டத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (20) என்பவர் கடத்தியது தெரியவந்தது.
மேலும், கல்லூரி மாணவியை தனது உறவினர் வீட்டில் தங்கவைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மணிகண்டன் வற்புறுத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்தப் பெண்ணை மீட்டு மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.