மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் மே 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று (மே.4) யாகசாலை முதல் கால பூஜை தொடங்கியது.
இதில் பங்கேற்பதற்காக மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆலயத்திற்கு வருகை புரிந்தார். அவருக்கு தருமபுர ஆதீனம் சார்பில் கட்டளைத் தம்பிரான் முன்னிலையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்திற்கு அருகே உள்ள கட்டளை மடத்தில் தங்கியிருந்த தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இரு சன்னிதானங்களும் யாகசாலை பூர்ணாஹூதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அதன் பின் பூர்ணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்றது. தற்போது தருமபுர ஆதீன பட்டினப்பிரவேச பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு குருமகா சன்னிதானங்கள் சந்தித்துப் பேசிக்கொண்டது, முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: 'உயிரைக்கொடுத்தாவது தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்தை நடத்துவோம்' - மதுரை ஆதீனம்