மயிலாடுதுறை: இந்திய நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் ( Independence Day 2023) நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 இன்று கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்திற்காக, கடந்த சில நாட்களாகவே மொத்த நாடே தயாராகிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா அரங்ககுடியில் உள்ள என்.எம்.எஸ் நேரு மெமோரியல் பள்ளியில் 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மனதில் தேசப்பற்றை ஈர்க்கும் விதமாக புதுவிதமான முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அதாவது தேசம் முதலில் முதன்மையானது என்ற சுதந்திர தின தீம் அடிப்படையில் மாணவர்களுக்கு இந்திய தேசத்தின் புரிதலை உணர்த்தும் விதமாக இந்திய தேச வரைபடம் வரையப்பட்ட பிளக்ஸ் பேனரில் நாணயங்களால் (coins) நிரப்பி சாதனை படைத்து தங்கள் தேசபக்தியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று (ஆகஸ்ட் 14ஆம் தேதி) நடைபெற்றது.
தேசியக் கொடியின் வர்ணம் தீட்டப்பட்ட பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் தேசியகொடி நிறத்தில் சீருடை அணிந்த மாணவ மாணவிகள் 1 ரூபாய் மற்றும் 2 ரூபாய் சில்லறை நாணயங்களை இந்திய வரைபடத்தின் மீது 2 நிமிடங்களில் நிரப்பி சாதனை படைத்தனர். மொத்தம் 3,013 ரூபாய் காயின்களைக் கொண்டு, இந்த சாதனை முயற்சி நடத்தப்பட்டது.
மேலும் இந்த சாதனையை என்.எம்.எஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் முதல் சாதனையை உருவாக்குவதற்காக இந்த சாதனை பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இந்திய தேச வரைபடத்திற்கு பயன்படுத்தப்பட்ட சில்லறை நாணயங்களை (coins) கல்வி அறக்கட்டளைக்கு மாணவர்கள் சார்பில் பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர்.
அதைத் தொடர்ந்து, மாணவர்கள் அனைவரும் கைகளில் மூவர்ண பேண்டுகள் அணிந்து தேசியக் கொடியை பிடித்தவாறு "நேஷன் ஃபர்ஸ்ட், ஆல்வேஸ் ஃபர்ஸ்ட்" என்று கோரசாக உற்சாக முழக்கமிட்டு சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் மாணவர்கள் தாங்கள் சேமித்து வைத்திருந்த தொகையில் இருந்து இந்த ரூபாய் நாணயங்களை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளின் தேசப்பற்றுடன் கூடிய இந்த சாதனை முயற்சி பாராட்டுக்குரியது.
இதையும் படிங்க: Independence day 2023: சுதந்திர தினத்திற்காக ரயில் நிலையங்களில் தீவிர பாதுகாப்பு!