தமிழ்நாட்டிலிருந்து லட்சக்கணக்கானோர் விவசாயம், கூலித்தொழில் உள்ளிட்ட பணிகளுக்காகவும், மருத்துவம், பள்ளி, கல்லூரி படிப்பு பயிலுவதற்காகவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
இந்நிலையில், சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த டிசம்பர் மாதம் 21ஆம் தேதி கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கி உலகம் முழுவதும் தனது கோரத்தாண்டவத்தைக் காட்டிவருகிறது.
இதற்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்நோய்த்தொற்றால் இதுவரை 43 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு மூன்று லட்சத்தை நெருங்கிவருகிறது. 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து உள்ளனர். இதனிடையே, இந்தப் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.
இதனால், சொந்த ஊரைவிட்டு பணி நிமித்தமாகவும், மேற்படிப்பு படிக்கவும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அங்கேயே சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
அதன்படி, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் ராயன் பாளையத்தில் இயங்கிவரும் மத்திய அரசின் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் அம்மாவட்டத்தைச் சேர்ந்த 17 மாணவர்கள் மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளி பரிமாற்ற திட்டத்தின்கீழ் (School Transfer Program) பயிலச் சென்றனர்.
அந்த மாணவர்கள், தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் போதிய வசதி இல்லாமல் தவித்துவந்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் மத்தியப் பிரதேசத்தில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க கோரிக்கை விடுத்து மனு ஒன்றை மார்ச் மாத இறுதியில் காரைக்கால் ஆட்சியரிடம் வழங்கினர்.
ஆனால், இந்த விவகாரத்தில் ஆட்சியர் நடவடிக்கை எடுக்காததால் (கரோனா தொடர்பான மற்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்) பெற்றோர்களும் மாணவர்களும் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து, 'ம.பி.யில் தவிக்கும் பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள்' என்ற அந்தப் பெற்றோர்களின் மனக்குமுறல்களையும் நமது தளத்தில் வெளியிட்டோம்.
இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் சார்பாக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டு விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களை மீட்க வேண்டும் என அழுத்தமாக வலியுறுத்தியிருந்தோம்.
பொறுமை காத்துவந்த பெற்றோர்கள் ஏப்ரல் 27ஆம் தேதி ம.பி.யில் சிக்கித் தவிக்கும் 17 மாணவர்களை மீட்க வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், தொடர்ச்சியாக நமது ஈடிவி பாரத் தளத்தில் செய்தி வெளியிட்டும் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியும் வந்தோம். இதன்பேரில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா, மத்தியப் பிரதேச மாநில ரேவா மாவட்ட ஆட்சியர் பசந்த் குர்ரேவைத் தொடர்புகொண்டு மாணவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வலியுறுத்தினார்.
இதையடுத்து, மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்ததன்படி, மாணவர்கள் 17 பேரும் மத்தியப் பிரதேசத்திலிருந்து பேருந்து மூலம் காரைக்காலுக்கு பத்திரமாக அழைத்துவரப்பட்டனர். பின்னர், அம்மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள், "எங்கள் பிள்ளைகளை எங்களிடம் சேர்க்க தொடர்ச்சியாகச் செய்தி வெளியிட்டு பெரும் உதவிபுரிந்த ஈடிவி பாரத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என மகிழ்வுடன் தெரிவித்தனர்.