நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாடு மக்கள் விரும்பாத நாசகர திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் வேண்டாம் என்றும், காவிரிப் படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும், நீண்ட காலமாக மக்கள் போராடி வருகின்றனர்.
ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டத்திற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஏற்கனவே முதலமைச்சர் பழனிசாமி அரசு அறிவித்திருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் 274 இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஆய்விற்கும், மத்திய அரசு அமுல்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு எந்த வகையான எதிர்ப்பும் இல்லாமல் இருப்பது கண்டனத்திற்குரியது. இயற்கை விவசாயத்தின் பிதாமகன் நம்மாழ்வார் தொடங்கிய பேரழிவுக்கு எதிரான பேரியக்கம் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து வரும் 12-ஆம் தேதி நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் மமக முழு ஆதரவு அளிக்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலை வளாகத்திலேயே அணுக்கழிவுகளை வைப்பது கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டில் மத்திய அரசு துறைகளில் வெளிமாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான மின்வாரிய துறையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் உதவி பொறியாளர்களாக பணி அமர்த்தப்படுவது தமிழ்நாட்டு மக்களை பாதிக்கும் செயலாகும். நாசகர திட்டங்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவதை தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.
நாசகர திட்டங்களை தடுத்து நிறுத்த அதிமுக அரசு கவிழ வேண்டும். ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் நினைக்கத் தொடங்கி உள்ளனர். ஒரு கட்சிக்கு இரண்டு தலைமை இருப்பது அந்தக் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லாது அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கைதான்” என்றார்.