நாகப்பட்டினம் முதலாவது கடற்கரை சாலையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நெல் மூட்டைகளை எடை போடும் இயந்திரம் உள்ளது. இங்கு நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து லாரிகளில் ஏற்றி வரப்படும் நெல் மூட்டைகள், எடை போட்டு சரக்கு ரயில்களில் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த தனியார் நிறுவனத்திற்கு வெளியே நெல் மூட்டைகளை எடை போடுவதற்காக லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு தாறுமாறாக ஓட்டிச் சென்றார். அப்போது அங்கிருந்த மூன்று லாரிகள் மீது அவர் ஓட்டிச் சென்ற லாரி மோதி விபத்தானது.
உடனே அங்கிருந்த லாரி ஓட்டுநர்கள் அந்த நபரை பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் வலிவலம் காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரின் மகன் தமிழ்வேந்தன் என்பது தெரியவந்தது.
மேலும் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, லாரியை கடத்த முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 6 டன் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது!