மயிலாடுதுறை: இந்திய சுதந்திரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தின் பங்கு குறித்து 24ஆவது குருமகா சந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ‘ஆங்கிலேய அலுவலர் மவுண்ட் பேட்டன் பிரபுவிடமிருந்து செங்கோலைப்பெற்றது மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவாவடுதுறை ஆதீனம் அவர்கள் தான். அதுவும் திருஞானசம்பந்த பெருமானின் கோளறு பதிகத்தை ஆதீன ஓதுவார் பாடி முடித்த பின்னரே பெறப்பட்டது’ எனக் கூறினார்.
மேலும், ‘1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்குவதற்கான சட்ட ரீதியிலான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, ஆங்கில அலுவலர் மவுண்ட் பேட்டன், நேருவை அழைத்து, ''இந்தியாவிற்குச் சுதந்திரம் கொடுக்கப் போகிறோம். அதை எப்படிப் பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்?'' என்று கேட்டார். நேரு சுதந்திரத்தை அறிவித்து நம்மவர் அரியணை ஏறும் அதிகாரப்பூர்வ விழாவிற்கு ஏற்பாடு செய்வதில் முனைந்தார். அவரோ சடங்குகள், மதங்களில் பழக்கம் இல்லாதவர். எனவே, ராஜாஜியிடம் கூறினார்.
உடனே ராஜாஜி, “கவலை வேண்டாம், தமிழ்நாட்டில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வார். அதைப்போல நாமும் ஒரு செங்கோலைத் தயாரிப்போம். அதை வெள்ளைக்காரர்களிடமிருந்து நமது குருமார்களில் ஒருவர் மூலம், பெற்றுக் கொள்வோம் என்றார். நேருவும் அதற்குச் சம்மதம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து நேரம் குறைவாக உள்ளது, உடனே செங்கோலுக்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார். மூதறிஞர் உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் திருக்கரங்களால் செங்கோல் கொடுத்து ஆசிநல்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றைய ஆதீனம் 20ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக சுவாமிகள் அப்போது காய்ச்சலால் அவதியுற்றுக்கொண்டிருந்தார்.
டெல்லிக்குப் புறப்பட்ட ஆதீன அடியார்கள்: எனவே, ஆதீனக் கட்டளைத்தம்பிரான் சடைச்சாமி என்றழைக்கப்பட்ட ஸ்ரீமத் திருவதிகை குமாரசாமி தம்பிரான் சுவாமிகளையும், ஓதுவார் ஒருவரையும், ஆதீன நாதஸ்வர வித்துவான் 'நாதஸ்வர சக்கரவர்த்தி" திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையையும் டெல்லிக்குத் தனிவிமானத்தில் அனுப்பி வைக்க ஏற்பாடாயிற்று.
அன்றைக்குப் பிரபலமாயிருந்த சென்னை உம்மிடி பங்காரு செட்டியார் நகைக்கடையில் சைவச்சின்னம் பொறித்த தங்கச் செங்கோல் ஒன்று செய்யும்படி ஆதீனத்திலிருந்து சொல்லப்பட்டது.
புறப்படும்போது ஓதுவார் பணிவுடன் ஆதீனத்தைப்பார்த்து, அரசு விழாவில் தான் பாடவேண்டிய திருமுறைப்பாடல் எது எனக் குறிப்பிட்டுக் கட்டளை இடவேண்டும் என்றுகேட்டார். ஆதீனமும் கோளறு பதிகத்தைப் பாடச்சொன்னார்கள்.
ஆகஸ்ட் 15ஆம் நாள் நள்ளிரவில், மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை, திருவாவடுதுறை ஆதீனக்கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றார்.
செங்கோலுக்கு புனிதநீர் தெளித்து, ஓதுவாமூர்த்திகள், 'வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்' என்று தொடங்குகிற தேவார திருப்பதிகத்தை முழுவதுமாகப் பாடி முடிக்கும்போது செங்கோலை நேருவிடம் வழங்கினார்கள்.
அரசு சின்னமாகச் செங்கோல்: அரசு சின்னமாக இருக்க வேண்டிய சுதந்திரச் செங்கோல் தற்போது பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரில் உள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவனில், கண்ணாடி பேழைக்குள் உறங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருமுறையும் பாரதத்தின் ஆட்சி மாற்றத்தின்போது இந்த செங்கோல் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க:தேசத்திற்காக பாடுபட்ட தியாகிகள் பற்றி இளைஞர்கள் அறிய தேசியக்கொடி ஏற்ற வேண்டும் - எல்.முருகன்