புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா நம்பிவயல் காட்டாத்தியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(32). அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் முருகேசன்(28). இவர்கள் இரண்டு பேரும் நாகை அருகே திருமருகல் சாலையில் உள்ள கலியபெருமாள் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்துவந்த முருகேசனும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆனந்தனும் பங்கின் மொத்த வரவு செலவு கணக்குகளையும் பார்த்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் வரவு செலவு கணக்கில் சுமார் ரூபாய் 8 லட்சத்திற்கான கணக்கு இல்லாததால், திருமருகல் பகுதியை சேர்ந்த சில கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருவரும் சமாளித்து வந்துள்ளனர்.
தொடர்ந்து கணக்கில் வராத தொகையை இருவரும் ஒப்புகொள்வதாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உரிமையாளர் கலியபெருமாளிடம் ஜூன் மாதம் தருவதாக கூறி எழுதி கொடுத்து பணியாற்றி வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன் கடந்த 2ஆம் தேதி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர் கலியபெருமாள் திட்டச்சேரி காவல்நிலையத்தில் நேற்று இரவு முருகேசனை அழைத்து வந்து புகார் அளித்ததாகவும், முழு தொகையையும் முருகேசனை ஒப்புகொள்ளும்படி காவல்துறை முன் வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து இருந்த முருகேசன் மொத்த தொகையும் தான் கொடுக்க வேண்டும் அச்சத்திலும், ஆனந்தன் உயிரிழந்த சோகத்திலும் பெட்ரோல் பங்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த திட்டச்சேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இருவரது உறவினர்களும் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கந்துவட்டி கும்பலால் தொடர்ந்து மிரட்டப்பட்டு உயிரிழப்பு நடந்துள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்துள்ள திட்டச்சேரி காவல்துறை, புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்துபோன ஆனந்தன், முருகேசன் ஆகிய இரண்டு பேரும் பணி செய்யும் இடத்தில் உரிமையாளர், கந்துவட்டி கும்பலிடம் கடன் வாங்கி உயிரிழந்து உள்ளார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? போன்ற பல்வேறு கோணத்தில் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையில் உயிரிழந்த முருகேசன் கந்துவட்டி கும்பல் குறித்தும், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டிபணத்தின் வரவு செலவு கணக்குகள் குறித்தும் காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பெட்ரோல் பங்கின் மேலாளர் சுரேஷ்குமாருக்கும் கந்துவட்டி கும்பல் குறித்து பல விஷயங்கள் தெரியும் என்றும், பங்கின் உரிமையாளரிடம் காவல்துறை முறையான விசாரணை நடத்தவில்லை என்று உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கந்துவட்டி கொடுமையால் நாகையில் பெட்ரோல் பங்கின் ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துபாயிலிருந்து திரும்பியவர் தூக்கிட்டுத் தற்கொலை!