மயிலாடுதுறை : தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 31ஆம்தேதி முதல் 2ஆம்தேதி காலை 6மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது.
மூன்று நாள்களில் சராசரியாக 162 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த கனமழையால் தரங்கம்பாடி தாலுகாவில் 3 ஆயிரம் ஏக்கருக்குமேல் சம்பா தாளடி பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன.
இந்நிலையில் நீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில், தரங்கம்பாடி தாலுகாவில் மாற்றுபயிராக சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, நிலக்கடலை சாகுபடி மழைநீரில் மூழ்கியுள்ளது.
குறிப்பாக, காழியப்பநல்லூர், ஆணைக்கோவில், கண்ணப்பன்மூலை, சிங்காநோடை, டிமணல்மேடு, அனந்தமங்கலம், திருக்கடையூர் உள்ளிட்ட பகுதிகளில் 20 ஏக்கரில் உளுந்தும், 100 ஏக்கரில் கடலையும் கனமழையால்நீரில் மூழ்கியுள்ளன.
10 முதல் 20 நாள்கள் ஆன பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் வேர்கள் அழுகி பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறம் விவசாயிகள் மழைநீரை வெளியேற்றி வருகின்றனர்.
வம்பன் 8 ரக (உளுந்து) விதைகளையே பெரும்பாலான விவசாயிகள் விதைத்துள்ளதாகவும், வம்பன் 8 ரக விதையும், நிலக்கடலை விதைகள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளதாக கூறும் விவசாயிகள் தங்குதடையின்றி விதைகள் கிடைக்கவும், கடந்த ஆண்டு அரசு உழவடை செய்வதற்கு இயந்திரகூலியை மானியமாக வழங்கியது போல் இந்த ஆண்டும் அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : தென் தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்