நாகை மாவட்டத்தில் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி காவிரிப்படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பாக, இன்று நாகையில் கண்டன பேரணி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நாகை அவுரி திடலில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள், அனைத்து கட்சியினர் ஆகியோர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், திமுக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் திமுக, சிபிஎம், சிபிஐ, நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், விவசாய சங்கத்தினர் உள்ளிட்டோர் நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரிடம் மனு அளிக்கச் சென்றனர்.
அப்போது அங்கு ஆட்சியர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் தங்களின் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். பின்னர் மனுவினை மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்துச் சென்றனர்.