நாகப்பட்டினம்: அருள்மிகு காயாரோகணம் சுவாமி உடனுறை நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலுக்குச் சொந்தமான வணிக நிறுவனங்களில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் பல லட்ச ரூபாய் ஏமாற்றி வந்தனர்.
இந்நிலையில் இந்து சமய அJநிலையத்துறை உதவி ஆணையர் ராணி மற்றும் சிறப்பு வட்டாட்சியர் அமுத விஜயரங்கன் மற்றும் அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாணயக்கார தெருவில் உள்ள மகாராஜன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் சுமார் 35 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் அளவில் ஏமாற்றி வந்த நிலையில் கோயில் ஊழியர்கள் கடையில் உள்ள பொருள்களை வெளியேற்றி விட்டு கடையை மூடி சீல் வைத்தனர்.
இதேபோன்று ஜோதி பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான வாசவி ஜுவல்லர்ஸ் தங்க நகை கடை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 22 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் வாடகை பாக்கியை வைத்திருந்ததால் அந்த கடையையும் பூட்டி சீல் வைத்தனர்.
திருக்கோயில் வாடகைதாரர்கள் உடனடியாக வாடகை செலுத்த வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறநிலைய துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரூ.2043 கோடி மதிப்பிலான கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்பு!