மயிலாடுதுறை: வேகமெடுக்கும் கரோனா வைரஸ் பரவலால் தமிழ்நாடு அரசு கடந்த 6ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்தி வருகிறது.
அவ்வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் 3ஆவது வாரமாக ஜன.23ஆம் தேதியான (ஞாயிறு) இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறன.
காவல்துறை தீவிரம்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவின் பேரில், உதவி காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் தலைமையில் 2 காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மேற்பார்வையில் 350க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு வட்டாரப் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
அபராதம்
6 நிரந்தர சோதனை சாவடிகள், 30 தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து அத்தியாவசிய தேவைகளின்றி ஊரடங்கு உத்தரவை மீறிய இருசக்கர வாகன ஓட்டிகளை எச்சரித்து இ-செலான் முறையில் ரூ.500 அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முகக்கவசம் அணியாமல் வந்த அவருக்கு அவகாசம் வழங்கி அறிவுரை கூறி அனுப்பிவைத்தனர். மேலும், மயிலாடுதுறை நகரில் பேருந்து நிலையம், மணிக்கூண்டு, கால்டெக்ஸ், கூறைநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நேதாஜி சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி!