மயிலாடுதுறை
மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அனைத்து தொழிலாளர் சங்கத்தினர், அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில பொதுச்செயலாளர் காளிமுத்து தலைமையில் தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்த கூடாது, போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்கிட வேண்டும், தொழிலாளியிடம் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்பி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிஐடியு உள்ளிட்ட சங்கங்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அதன் கூட்டமைப்பினர், பாதுகாப்பு வசதிகளுடன் மீண்டும் பேருந்து இயக்க வேண்டும், கரோனா காலத்தில் உயிரிழந்த பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையின் கிளை முன்பு பல்வேறு தொழிற்சங்கத்தினர், மத்திய அரசு கொண்டு வந்த மோட்டார் வாகன திருத்த சட்டம் அரசு போக்குவரத்து கழகங்களை மூடும் வகையில் உள்ளதால் அதனை திரும்ப பெற வேண்டும், போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் முறையை புகுத்த கூடாது, தொழிலாளர்களின் பறிக்கப்பட்ட விடுப்பை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நாகை
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல பணிமனை முன்பு அதன் தொழிலாளர்கள் தமிழ்நாடு அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது அவர்கள் போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த நிதி வழங்கிட வேண்டும், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பிடித்த தொகைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அதன் தொழிலாளர்கள், தமிழ்நாடு அரசு தனியாருக்கு சாதகமாக திருத்தம் செய்துள்ள மோட்டார் வாகன சட்டம் 288 (எ) பிரிவினை திரும்பப்பெற வேண்டும், தனியார் பேருந்தை வாடகைக்கு எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த விடுப்பையும் சம்பளத்தையும் உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொ.மு.ச. மாநில பொதுக்குழு உறுப்பினர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ் சங்கங்களின் கூட்டமைப்புகள் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பேருந்தை இயக்கக்கோரி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர் கைது!