நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி வடக்கு மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (32). தற்போது ஆட்டு இறைச்சி வியாபாரம் செய்துவரும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
இந்நிலையில் திருப்பூண்டியில் ஹோட்டல் தொடங்க வீட்டில் இருந்த நகையை நாகப்பட்டினத்தில் உள்ள அடகு கடையில் வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது விழுந்தமாவடி கன்னிதோப்பு அய்யனார் கோயில் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில் ரத்தம் வெள்ளத்தில் சரிந்த இளையராஜா சம்பவ இடத்திலேயை துடி துடித்து உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கீழையூர் காவலர்கள் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த இளையராஜா, கஜா புயலின்போது பாதித்த விழுந்தமாவடி பகுதிகளை பார்வையிடச் சென்ற கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனை அரிவாளால் வெட்ட துரத்தி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்லியில் விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீச்சு