தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சரும், அதிமுகவின் நிறுவனருமான எம்ஜிஆரின் 104ஆவது பிறந்த நாள் விழா இன்று மாநிலம் முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கட்சி கொடியை ஏற்றி, எம்ஜிஆரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்கட்டமாக 600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள மழை பாதிப்பு குறித்து கணக்கெடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி டெல்டா மாவட்டங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. மிக விரைவில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர்பார்க்கிற நல்லது நடக்கும்.
நெற்பயிர் பாதித்த பகுதிகளை காப்பீடு நிறுவனங்கள் பார்வையிட்டு கணக்கு எடுக்க வேண்டுமே தவிர, மழையால் சூழ்ந்த நெற்பயிருக்கு நிவாரணம் வழங்க முடியாது என கூறக்கூடாது" என்றார்.
தொடர்ந்து சசிகலாவை கூவம் நதியோடு ஒப்பிட்டு துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பதில் கூற மறுப்பு தெரிவித்து, சில வினாடிகள் மெளனமாக இருந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.
இதையும் படிங்க: திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்