மயிலாடுதுறை: நியாயவிலைக் கடையில் பொருள்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகாரளித்துள்ளனர்.
காளி ஊராட்சி அதியமானபுருசன் கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கன்னியாநத்தம் மகளிர் அங்காடியில் நியாயவிலைக்கடை பொருள்களை வாங்கிவருகின்றனர். இச்சூழலில், கடையின் ஊழியர் பொருள்களைத் தனியாருக்கு விற்றுவிடுவதாகவும், பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பொருள்களுக்கு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலையைப் பெறுவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், விநியோகிக்கப்படும் அரிசி தரமற்றதாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்க ஒருங்கிணைப்பாளர் ராம. சேயோன் தலைமையில், காளி ஒன்றியக் குழு உறுப்பினர் காந்தி உடன் சேர்ந்துகொண்டு அதியமானபுருசன் கிராம மக்கள், மயிலாடுதுறை வட்ட வழங்கல் அலுவலர் சாந்தியிடம் புகார் மனு அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட வட்ட வழங்கல் அலுவலர் சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைக்கு நேரில் சென்று ஆய்வுசெய்வதாக உறுதியளித்தார்.