நாகை மாவட்டம் சீர்காழி ரயில்வே சாலையில் வசித்து வரும் சகோதரர்கள் சேகர், ராஜேந்திரன், ரவி, பன்னீர் ஆகியோர் ஒரே இடத்தில் தனித்தனியே குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சேகர் என்பவரது குடிசை வீட்டில் இரவு திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில் வீடு மற்றும் வீட்டின் அருகே விற்பனைக்காக வைத்திருந்த விறகுகள் அனைத்தும் தீபிடித்து எரிந்தன.
தீ மளமளவென பரவி அருகிலிருந்த பன்னீர், ராஜேந்திரன், ரவி, ஆகியோரது வீடுகளும் பற்றியெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பூம்புகார் தீயணைப்பு நிலையத்தினர் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்தத் தீவிபத்தில் நான்குபேரது வீட்டிலிருந்த நகைகள், ரொக்கபணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சாம்பலாயின. மேலும் ராஜேந்திரன் மகள் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த 15 சவரன் தங்கநகைகள் ரூ. 2 லட்சம் பணமும், வீட்டிலிருந்த ஸ்மார்ட்கார்டு, ஆதார்கார்டு, வீட்டுபத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களும் தீவிபத்தில் சாம்பலாயின.
இந்த விபத்தில் மொத்தம் ரூ. 30 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சீர்காழி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதா என விசாரனை நடத்திவருகின்றனர்
மேலும் தகவலறிந்து வந்த சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பாரதி பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: சாக்கடை நீராக மாறிய தட்டான்குளம் - கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்