மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா, கிளியனூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, இந்த சுகாதார நிலைய கட்டடம் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை புதுப்பிக்கக் கோரி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்டது.
பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடம் மருத்துவமனை கட்டுவதற்காக இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்து ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. கிளியனூர் ஊராட்சி மன்றத்தலைவர் முகமது காலித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி இந்து, இஸ்லாமிய முறைகள்படி, வேத மந்திரங்கள் முழங்கியும் துவா செய்தும் நடைபெற்றது.
தரைத்தளத்தில் 2 மருத்துவர் அறைகள், மருந்து கொடுக்கும் அறை, ஊசி போடும் அறை, ஆய்வகம், கட்டு கட்டும் அறை, காத்திருப்பு அறை, கிடங்கு, கழிவறைகள் கட்டப்படுகின்றன.
பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெறும் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொது மருத்துவமனையாக மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகனிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: மின்சார மீட்டரின் வாடகை கட்டணத்தை மக்கள் மீது திணிப்பது நியாயமல்ல - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!