நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் முருகசங்கரன், பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த 23ஆம் தேதி கத்தியால் குத்தி படுகொலை செய்யபட்டனர். இதையடுத்து மூன்று தனிப்படை அமைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திய காவல்துறையினர், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனை கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் இந்த கொலையை தான் ஒருவனே செய்ததாக கார்த்திகேயன் வாக்குமூலம் அளித்துள்ளார். இருந்த போதும் இந்த கொலை கூலிப்படையை வைத்து தான் நடந்து இருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் விசாரணை அதிகாரியான தென்மண்டல காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் கொலை நடந்த முன்னாள் மேயர் இல்லத்திற்கு சென்று சுமார் அரைமணி நேரம் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்கள்.
பின்னர் அங்கிருந்து சென்ற அவர்கள் சிபிசிஐடி காவல் அலுவலகத்தில் வைத்து ஆலோசனை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து நேற்று இரவு கொலையாளி கார்த்திகேயன் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.