மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா பகுதியில் சந்திரபாடி என்ற மீனவ கிராமம் உள்ளது. இது மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மீனவ கிராமத்திற்குச் செல்ல வேண்டுமானால் புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம் சென்று தான் ஊருக்குள் செல்ல வேண்டும். இந்தச் சூழ்நிலை பல வருடங்களாக நிலவி வந்தது. மேலும், சந்திரபாடி கிராமத்தில் 750-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் நிலையில், பேருந்து வசதி இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், காரைக்கால் மாவட்ட தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்குச் சென்ற நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. அரசு பேருந்து வசதி இல்லாமல் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வந்தனர். இந்தக் கிராமத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நண்டலாறு சோதனைச்சாவடி சென்று, தான் பேருந்தில் செல்லும் சூழ்நிலை இருந்தது.
மேலும், சந்திரபாடி மீனவ கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாக மீனவ பஞ்சாயத்தார்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்றத் தலைவர் பிரிமளா ராஜ்குமார், பொது மக்களை அழைத்துச்சென்று மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தனர்.
இந்நிலையில் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சந்திரபாடி மீனவ கிராமத்திற்கு வரலாற்றில் முதன்முறையாக இன்று (27ஏ) அரசுப் பேருந்து சேவை துவங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேருந்திற்கு வாழைமரம், பலூன், மாலை உள்ளிட்ட தோரணங்கள் கட்டி கிராம மக்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, சிறப்புப் பூஜைகள் செய்து பூசணிக்காய் உடைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இப்பேருந்தை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், அரசுப் பேருந்தை சந்திரபாடி மீனவ கிராமத்தில் இருந்து பொறையார் பேருந்து நிலையம் வரை ஓட்டிச் சென்றார். மீனவர்கள், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். ஏராளமானோர் பேருந்தில் பயணம் செய்தனர். இந்த அரசுப்பேருந்து நாள் ஒன்றுக்கு காலை, மாலை என இரண்டு வேளை மட்டுமே இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதன்முதலாக இந்த மீனவ கிராமத்திற்கு அரசுப்பேருந்து இயக்கப்பட்டதால் கிராமமே விழாக்கோலம் பூண்டது. இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், மீனவப் பஞ்சாயத்தார்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:"உணவு, எரிபொருள், உர நெருக்கடியை சமாளிக்க உதவி" - ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மோடி பேச்சு!