மயிலாடுதுறை: கர்நாடகா மாநிலம் மற்றும் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் பாதுகாப்புக்கருதி வெள்ள நீர் முழுவதுமாக கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள வெள்ள நீரானது மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே சென்று பழையாறு அருகே கடலில் கலக்கிறது. நேற்று வரை 2 லட்சத்து 30 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ள நீர் சென்றது. இந்நிலையில் இன்று 1.30 லட்சம் கன அடியாக குறைக்கப்பட்ட நிலையிலும் கடல் சீற்றம் காரணமாக தண்ணீர் கடலுக்குச் செல்லும் தன்மை குறைந்துள்ளது.
இதனால் கொள்ளிடம் ஆற்றின் படுகை உள்ளே அமைந்துள்ள திட்டுக்கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல், கோரைத்திட்டு உள்ளிட்ட 4 கிராமங்களில் வெள்ள நீர் மூன்றாவது நாளாக சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
கிராமத்தின் மேடான பகுதி மக்கள் தேவைகளுக்கு படகுகள் மூலம் வெளியே சென்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மெய்யநாதன், நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டு அறிந்தார். அவர்களுக்கு உணவு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தண்ணீரால் கரையோர கிராமங்களிலும் திட்டுக்கிராமங்களிலும் பொதுமக்களின் வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்துள்ளோம். பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
நீண்ட நாள் கோரிக்கையான புயல் பாதுகாப்பு மையம் இரண்டு இடங்களில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் கரையைப் பலப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாற்று இடம் கேட்டுள்ள மக்களுக்கு அது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு