மயிலாடுதுறை: காவிரி துலாக்கட்டத்தில் நடைபெறும் புகழ்வாய்ந்த துலா உற்சவத்தை முன்னிட்டு சிவாலயங்களில் நேற்று (நவ. 7) திருக்கொடியேற்றம் நடைபெற்றது.
கங்கை முதலான புண்ணிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிக்கொண்டதாக புராணம் கூறுகிறது.
இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். ஐப்பசி ஒன்றாம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.
மேலும் பத்து நாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் நேற்று (நவ.7) திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
மயூரநாதர் ஆலயத்தில் அபயாம்பிகை சமேத மயூரநாதர், விநாயகர், தெய்வானை உடனாகிய சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி திருக்கொடியேற்றம் நடைபெற்றது. இதில் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று திருக்கொடி ஏற்றப்பட்டது.
பின்னர் பூஜிக்கப்பட்ட புனிதநீரால் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தைச் சுற்றி பஞ்ச மூர்த்திகளுக்கான கொடிகள் ஏற்றப்பட்டது.
இதில் திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிககள் உள்ளிட்ட திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோல் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்திலும் கொடியேற்றம் நடைபெற்றது. சுவாமியுடன் வீதியுலாவாக எடுத்துவரப்பட்ட கொடி பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி கொடியேற்றம் நடைபெற்றது.
கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ள பத்து நாள் உற்சவமாக மயூரநாதர் ஆலயத்தில் வருகின்ற 11ஆம் தேதி மயிலம்மன்பூஜை, 13ஆம் தேதி திருக்கல்யாணம், 15ஆம் தேதி திருத்தேரும், 16ஆம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1ஆம் தேதி முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்...