நாகப்பட்டினம்: தமிழ்நாட்டின் மீன்பிடி மாவட்டங்களில் உள்ள மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காகக் குறிப்பிட்ட காலம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த 61 நாட்கள் தடை கடந்த ஆண்டு முதல் விதிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக 45 நாட்கள் மட்டுமே தடை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள கடலோர மாவட்டங்களில் உள்ள மீனவர்கள் தங்களது படகுகளைக் கரையோரங்களில் நங்கூரம் செலுத்தி நிறுத்தி வைத்துள்ளனர். மீனவர்கள் அவர்களது மீன்பிடி சாதனங்களை அவர்களது இல்லத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
விதியை மீறினால் நடவடிக்கை: அரசு விதிக்கப்பட்ட தடையைமீறி, மீன் பிடிப்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்; மேலும் அவர்களின் மீன்பிடி உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது மீன்பிடிக்கத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மேலடுக்கு சுழற்சி: தென் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு