மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் தமிழகம் உள்ளிட்ட கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் 61 நாட்கள், கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். அரசு அறிவித்த மீன்பிடி தடைகாலம் ஏப்ரல் 14ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால், நாகை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர், கோடியக்கரை, நாகூர், திருமுல்லைவாசல், பழையார், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட 54 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்களின் விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகள் அனைத்தும், ஆங்காங்கே உள்ள துறைமுகம் மற்றும் கடலோரங்களில் பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், 61 நாட்கள் வரை மீன் பிடிக்க செல்லாததால் படகில் உள்ள வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீனவர்கள் பத்திரப்படுத்தி பாதுகாக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மீன்பிடி தடை காலங்களில் அரசு மீனவர் குடும்பத்திற்கு வழங்கும் நிவாரண தொகையான 5 ஆயிரம் ரூபாயை, 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதுடன், படகுகளை பழுது நீக்க 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரை ஆகும் செலவுத்தொகையை வங்கிக் கடனாகவோ அல்லது அரசு மானியமாகவோ வழங்க வேண்டும் என நாகை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மீன்பிடி தடைக்காலத்தை இயற்கை சீற்றமான நவம்பர்-டிசம்பர் காலங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நாகை மாவட்ட மீனவர்கள் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்டால் மீனவர்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் அது உத்திரவாதம் அளிக்கும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.