மயிலாடுதுறை: சீர்காழி அடுத்த கொட்டாயமேடு கிராமத்தைச் சேர்ந்தவர், நடராஜன். இவருக்குச் சொந்தமான படகில், அதே கிராமத்தைச் சேர்ந்த நடராஜன், பெருமாள், சூரியமூர்த்தி ஆகியோர் மீன் பிடிக்கச் சென்றனர். கரையில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் அனைவரும் மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டதாகவும், ராட்சத அலைகள் உருவானதாகவும் சொல்லப்படுகிறது. சில அடி உயரத்துக்கு எழுந்த ராட்சத அலையில் நடராஜனின் படகு கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் 3 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனர்.
நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கடலில் தத்தளித்துக்கொண்டு இருந்த நிலையில், அருகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தவர்கள் அவர்களை மீட்டனர். இதில் மீனவர் பெருமாள் மட்டும் கடலில் மூழ்கி மாயமானதாக மீட்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்த மீனவர்கள் நடரஜன், சூரியமூர்த்தி ஆகியோர் கரைக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடலில் கவிழ்ந்த படகையும் கயிறு கட்டி மற்ற மீனவர்கள் மீட்டனர். மாயமான மீனவர் பெருமாள் குறித்து கடலோர காவல்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மீனவர்கள் உதவியுடன் கடலில் மூழ்கி மாயமான பெருமாளை கடலோர காவல்படையினர் தேடி வருகின்றனர். தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 10 நாட்களுக்குப் பின், மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்ற நிலையில், படகு கவிழ்ந்து மீனவர் மாயமான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேயர் குழந்தைக்கு "திராவிட அரசன்" எனப் பெயர் சூட்டிய முதலமைச்சர்